English Tamil Thanglish
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: துறவறவியல் (Ascetic Virtue) அதிகாரம் 36 / 133

மெய்யுணர்தல் Truth-Conciousness (Chapter 36)

இவ்வதிகாரத்தில் குறள் 351 முதல் 360 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 351 ஓவியம்
குறள் எண்: #351 அதிகாரம் வரிசை: 1 / 10

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

"Of things devoid of truth as real things men deem;-Cause of degraded birth the fond delusive dream"

மு.வ உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

சாலமன் பாப்பையா: பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

குறள் 352 ஓவியம்
குறள் எண்: #352 அதிகாரம் வரிசை: 2 / 10

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

"Darkness departs, and rapture springs to men who see, The mystic vision pure, from all delusion free"

மு.வ உரை: மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

சாலமன் பாப்பையா: மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

குறள் 353 ஓவியம்
குறள் எண்: #353 அதிகாரம் வரிசை: 3 / 10

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

"When doubts disperse, and mists of error rollAway, nearer is heav'n than earth to sage's soul"

மு.வ உரை: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா: சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

குறள் 354 ஓவியம்
குறள் எண்: #354 அதிகாரம் வரிசை: 4 / 10

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

"Five-fold perception gained, what benefits accrueTo them whose spirits lack perception of the true"

மு.வ உரை: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா: மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

குறள் 355 ஓவியம்
குறள் எண்: #355 அதிகாரம் வரிசை: 5 / 10

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

"Whatever thing, of whatsoever kind it be,'Tis wisdom's part in each the very thing to see"

மு.வ உரை: எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா: எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

குறள் 356 ஓவியம்
குறள் எண்: #356 அதிகாரம் வரிசை: 6 / 10

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

"Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again"

மு.வ உரை: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

சாலமன் பாப்பையா: பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

குறள் 357 ஓவியம்
குறள் எண்: #357 அதிகாரம் வரிசை: 7 / 10

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

"The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell"

மு.வ உரை: ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

சாலமன் பாப்பையா: பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

குறள் 358 ஓவியம்
குறள் எண்: #358 அதிகாரம் வரிசை: 8 / 10

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

"When folly, cause of births, departs; and soul can viewThe truth of things, man's dignity- 'tis wisdom true"

மு.வ உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா: பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

குறள் 359 ஓவியம்
குறள் எண்: #359 அதிகாரம் வரிசை: 9 / 10

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

"The true 'support' who knows- rejects 'supports' he sought before-Sorrow that clings all destroys, shall cling to him no more"

மு.வ உரை: எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

சாலமன் பாப்பையா: எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.

குறள் 360 ஓவியம்
குறள் எண்: #360 அதிகாரம் வரிசை: 10 / 10

காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

"When lust and wrath and error's triple tyranny is o'er, Their very names for aye extinct, then pain shall be no more"

மு.வ உரை: விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

சாலமன் பாப்பையா: விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural

Share