ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: துறவறவியல் (Ascetic Virtue) அதிகாரம் 37 / 133

அவா அறுத்தல் Curbing of Desire (Chapter 37)

இவ்வதிகாரத்தில் குறள் 361 முதல் 370 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 361 ஓவியம்
குறள் எண்: #361 அதிகாரம் வரிசை: 1 / 10

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

"The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring"

மு.வ உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சாலமன் பாப்பையா: எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

குறள் 362 ஓவியம்
குறள் எண்: #362 அதிகாரம் வரிசை: 2 / 10

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

"If desire you feel, freedom from changing birth require!'I' will come, if you desire to 'scape, set free from all desire"

மு.வ உரை: ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா: பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

குறள் 363 ஓவியம்
குறள் எண்: #363 அதிகாரம் வரிசை: 3 / 10

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

"No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspire"

மு.வ உரை: அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

சாலமன் பாப்பையா: எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

குறள் 364 ஓவியம்
குறள் எண்: #364 அதிகாரம் வரிசை: 4 / 10

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

"Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow"

மு.வ உரை: தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா: மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

குறள் 365 ஓவியம்
குறள் எண்: #365 அதிகாரம் வரிசை: 5 / 10

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

"Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty"

மு.வ உரை: பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா: ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

குறள் 366 ஓவியம்
குறள் எண்: #366 அதிகாரம் வரிசை: 6 / 10

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

"Desire each soul beguiles; True virtue dreads its wiles"

மு.வ உரை: ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா: ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

குறள் 367 ஓவியம்
குறள் எண்: #367 அதிகாரம் வரிசை: 7 / 10

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

"Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed"

மு.வ உரை: ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா: ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

குறள் 368 ஓவியம்
குறள் எண்: #368 அதிகாரம் வரிசை: 8 / 10

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

"Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide"

மு.வ உரை: அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

சாலமன் பாப்பையா: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

குறள் 369 ஓவியம்
குறள் எண்: #369 அதிகாரம் வரிசை: 9 / 10

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

"When dies away desire, that woe of woesEv'n here the soul unceasing rapture knows"

மு.வ உரை: அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

குறள் 370 ஓவியம்
குறள் எண்: #370 அதிகாரம் வரிசை: 10 / 10

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

"Drive from thy soul desire insatiate; Straight'way is gained the moveless blissful state"

மு.வ உரை: ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா: ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்