ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: துறவறவியல் (Ascetic Virtue) அதிகாரம் 35 / 133

துறவு Renunciation (Chapter 35)

இவ்வதிகாரத்தில் குறள் 341 முதல் 350 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 341 ஓவியம்
குறள் எண்: #341 அதிகாரம் வரிசை: 1 / 10

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

"From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he"

மு.வ உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

சாலமன் பாப்பையா: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

குறள் 342 ஓவியம்
குறள் எண்: #342 அதிகாரம் வரிசை: 2 / 10

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

"'Renunciation' made- ev'n here true pleasures men acquire;'Renounce' while time is yet, if to those pleasures you aspire"

மு.வ உரை: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

சாலமன் பாப்பையா: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

குறள் 343 ஓவியம்
குறள் எண்: #343 அதிகாரம் வரிசை: 3 / 10

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

"'Perceptions of the five' must all expire;-Relinquished in its order each desire"

மு.வ உரை: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

சாலமன் பாப்பையா: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.

குறள் 344 ஓவியம்
குறள் எண்: #344 அதிகாரம் வரிசை: 4 / 10

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

"'Privation absolute' is penance true;'Possession' brings bewilderment anew"

மு.வ உரை: தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

சாலமன் பாப்பையா: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

குறள் 345 ஓவியம்
குறள் எண்: #345 அதிகாரம் வரிசை: 5 / 10

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

"To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life"

மு.வ உரை: பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.

சாலமன் பாப்பையா: இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?

குறள் 346 ஓவியம்
குறள் எண்: #346 அதிகாரம் வரிசை: 6 / 10

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

"Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine"

மு.வ உரை: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

சாலமன் பாப்பையா: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

குறள் 347 ஓவியம்
குறள் எண்: #347 அதிகாரம் வரிசை: 7 / 10

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு.

"Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp"

மு.வ உரை: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

சாலமன் பாப்பையா: ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

குறள் 348 ஓவியம்
குறள் எண்: #348 அதிகாரம் வரிசை: 8 / 10

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

"Who thoroughly 'renounce' on highest height are set; The rest bewildered, lie entangled in the net"

மு.வ உரை: முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

சாலமன் பாப்பையா: ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

குறள் 349 ஓவியம்
குறள் எண்: #349 அதிகாரம் வரிசை: 9 / 10

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

"When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability"

மு.வ உரை: இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

சாலமன் பாப்பையா: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

குறள் 350 ஓவியம்
குறள் எண்: #350 அதிகாரம் வரிசை: 10 / 10

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

"Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing"

மு.வ உரை: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா: ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்