ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
பொருட்பால் (Wealth) இயல்: குடியியல் (Miscellaneous) அதிகாரம் 98 / 133

பெருமை Greatness (Chapter 98)

இவ்வதிகாரத்தில் குறள் 971 முதல் 980 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 971 ஓவியம்
குறள் எண்: #971 அதிகாரம் வரிசை: 1 / 10

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

"The light of life is mental energy; disgrace is hisWho says, 'I 'ill lead a happy life devoid of this.'"

மு.வ உரை: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

சாலமன் பாப்பையா: ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

குறள் 972 ஓவியம்
குறள் எண்: #972 அதிகாரம் வரிசை: 2 / 10

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

"All men that live are one in circumstances of birth; Diversities of works give each his special worth"

மு.வ உரை: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

சாலமன் பாப்பையா: எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

குறள் 973 ஓவியம்
குறள் எண்: #973 அதிகாரம் வரிசை: 3 / 10

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

"The men of lofty line, whose souls are mean, are never greatThe men of lowly birth, when high of soul, are not of low estate"

மு.வ உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

சாலமன் பாப்பையா: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

குறள் 974 ஓவியம்
குறள் எண்: #974 அதிகாரம் வரிசை: 4 / 10

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

"Like single-hearted women, greatness too, Exists while to itself is true"

மு.வ உரை: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

சாலமன் பாப்பையா: தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.

குறள் 975 ஓவியம்
குறள் எண்: #975 அதிகாரம் வரிசை: 5 / 10

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

"The man endowed with greatness true, Rare deeds in perfect wise will do"

மு.வ உரை: பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

குறள் 976 ஓவியம்
குறள் எண்: #976 அதிகாரம் வரிசை: 6 / 10

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.

"'As votaries of the truly great we will ourselves enroll,'Is thought that enters not the mind of men of little soul"

மு.வ உரை: பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

சாலமன் பாப்பையா: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.

குறள் 977 ஓவியம்
குறள் எண்: #977 அதிகாரம் வரிசை: 7 / 10

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

"Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bred"

மு.வ உரை: சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

சாலமன் பாப்பையா: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

குறள் 978 ஓவியம்
குறள் எண்: #978 அதிகாரம் வரிசை: 8 / 10

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

"Greatness humbly bends, but littleness alwaysSpreads out its plumes, and loads itself with praise"

மு.வ உரை: பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

குறள் 979 ஓவியம்
குறள் எண்: #979 அதிகாரம் வரிசை: 9 / 10

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

"Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme"

மு.வ உரை: பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

சாலமன் பாப்பையா: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

குறள் 980 ஓவியம்
குறள் எண்: #980 அதிகாரம் வரிசை: 10 / 10

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

"Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim"

மு.வ உரை: பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்

சாலமன் பாப்பையா: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்