ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
பொருட்பால் (Wealth) இயல்: குடியியல் (Miscellaneous) அதிகாரம் 97 / 133

மானம் Honour (Chapter 97)

இவ்வதிகாரத்தில் குறள் 961 முதல் 970 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 961 ஓவியம்
குறள் எண்: #961 அதிகாரம் வரிசை: 1 / 10

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

"Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stain"

மு.வ உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா: ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

குறள் 962 ஓவியம்
குறள் எண்: #962 அதிகாரம் வரிசை: 2 / 10

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

"Who seek with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's name"

மு.வ உரை: புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா: புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

குறள் 963 ஓவியம்
குறள் எண்: #963 அதிகாரம் வரிசை: 3 / 10

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

"Bow down thy soul, with increase blest, in happy hour; Lift up thy heart, when stript of all by fortune's power"

மு.வ உரை: செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

சாலமன் பாப்பையா: நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

குறள் 964 ஓவியம்
குறள் எண்: #964 அதிகாரம் வரிசை: 4 / 10

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

"Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth"

மு.வ உரை: மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

சாலமன் பாப்பையா: நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

குறள் 965 ஓவியம்
குறள் எண்: #965 அதிகாரம் வரிசை: 5 / 10

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

"If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought"

மு.வ உரை: மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

சாலமன் பாப்பையா: நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

குறள் 966 ஓவியம்
குறள் எண்: #966 அதிகாரம் வரிசை: 6 / 10

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

"It yields no praise, nor to the land of Gods throws wide the gate:Why follow men who scorn, and at their bidding wait"

மு.வ உரை: மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

சாலமன் பாப்பையா: உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?

குறள் 967 ஓவியம்
குறள் எண்: #967 அதிகாரம் வரிசை: 7 / 10

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

"Better 'twere said, 'He's perished!' than to gainThe means to live, following in foeman's train"

மு.வ உரை: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா: இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

குறள் 968 ஓவியம்
குறள் எண்: #968 அதிகாரம் வரிசை: 8 / 10

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

"When high estate has lost its pride of honour meet, Is life, that nurses this poor flesh, as nectar sweet"

மு.வ உரை: ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

சாலமன் பாப்பையா: குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?

குறள் 969 ஓவியம்
குறள் எண்: #969 அதிகாரம் வரிசை: 9 / 10

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

"Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day"

மு.வ உரை: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

சாலமன் பாப்பையா: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

குறள் 970 ஓவியம்
குறள் எண்: #970 அதிகாரம் வரிசை: 10 / 10

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

"Who, when dishonour comes, refuse to live, their honoured memoryWill live in worship and applause of all the world for aye"

மு.வ உரை: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

சாலமன் பாப்பையா: தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்