English Tamil Thanglish
Login Register
பொருட்பால் (Wealth) இயல்: அமைச்சியல் (Minister of State) அதிகாரம் 64 / 133

அமைச்சு The Office of Minister of state (Chapter 64)

இவ்வதிகாரத்தில் குறள் 631 முதல் 640 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 631 ஓவியம்
குறள் எண்: #631 அதிகாரம் வரிசை: 1 / 10

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

"A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge"

மு.வ உரை: செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா: ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

குறள் 632 ஓவியம்
குறள் எண்: #632 அதிகாரம் வரிசை: 2 / 10

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

"A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combined"

மு.வ உரை: அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா: செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

குறள் 633 ஓவியம்
குறள் எண்: #633 அதிகாரம் வரிசை: 3 / 10

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

"A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide"

மு.வ உரை: பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா: நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

குறள் 634 ஓவியம்
குறள் எண்: #634 அதிகாரம் வரிசை: 4 / 10

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

"A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word"

மு.வ உரை: (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா: ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

குறள் 635 ஓவியம்
குறள் எண்: #635 அதிகாரம் வரிசை: 5 / 10

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

"The man who virtue knows, has use of wise and pleasant wordsWith plans for every season apt, in counsel aid affords"

மு.வ உரை: அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

சாலமன் பாப்பையா: அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

குறள் 636 ஓவியம்
குறள் எண்: #636 அதிகாரம் வரிசை: 6 / 10

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

"When native subtilty combines with sound scholastic lore,'Tis subtilty surpassing all, which nothing stands before"

மு.வ உரை: இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

சாலமன் பாப்பையா: இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?

குறள் 637 ஓவியம்
குறள் எண்: #637 அதிகாரம் வரிசை: 7 / 10

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

"Though knowing all that books can teach, 'tis truest tactTo follow common sense of men in act"

மு.வ உரை: நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா: பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

குறள் 638 ஓவியம்
குறள் எண்: #638 அதிகாரம் வரிசை: 8 / 10

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

"'Tis duty of the man in place aloud to sayThe very truth, though unwise king may cast his words away"

மு.வ உரை: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.

சாலமன் பாப்பையா: அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

குறள் 639 ஓவியம்
குறள் எண்: #639 அதிகாரம் வரிசை: 9 / 10

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

"A minister who by king's side plots evil thingsWorse woes than countless foemen brings"

மு.வ உரை: தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா: தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

குறள் 640 ஓவியம்
குறள் எண்: #640 அதிகாரம் வரிசை: 10 / 10

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.

"For gain of end desired just counsel nought availsTo minister, when tact in execution fails"

மு.வ உரை: (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

சாலமன் பாப்பையா: செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural