ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் பொருட்பால் அதிகாரம் 63: இடுக்கண் அழியாமை
பொருட்பால் (Wealth) இயல்: அரசியல் (Royalty) அதிகாரம் 63 / 133

இடுக்கண் அழியாமை Hopefulness in Trouble (Chapter 63)

இவ்வதிகாரத்தில் குறள் 621 முதல் 630 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 621 ஓவியம்
குறள் எண்: #621 அதிகாரம் வரிசை: 1 / 10

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

"Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power"

மு.வ உரை: துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா: நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

குறள் 622 ஓவியம்
குறள் எண்: #622 அதிகாரம் வரிசை: 2 / 10

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

"Though sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it,- it is gone"

மு.வ உரை: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

சாலமன் பாப்பையா: வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

குறள் 623 ஓவியம்
குறள் எண்: #623 அதிகாரம் வரிசை: 3 / 10

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

"Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart"

மு.வ உரை: துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

சாலமன் பாப்பையா: வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

குறள் 624 ஓவியம்
குறள் எண்: #624 அதிகாரம் வரிசை: 4 / 10

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

"Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away"

மு.வ உரை: தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா: செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

குறள் 625 ஓவியம்
குறள் எண்: #625 அதிகாரம் வரிசை: 5 / 10

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

"When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart"

மு.வ உரை: விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

சாலமன் பாப்பையா: ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

குறள் 626 ஓவியம்
குறள் எண்: #626 அதிகாரம் வரிசை: 6 / 10

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

"Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart"

மு.வ உரை: செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

சாலமன் பாப்பையா: பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?

குறள் 627 ஓவியம்
குறள் எண்: #627 அதிகாரம் வரிசை: 7 / 10

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

"'Man's frame is sorrow's target', the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects"

மு.வ உரை: மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

சாலமன் பாப்பையா: உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

குறள் 628 ஓவியம்
குறள் எண்: #628 அதிகாரம் வரிசை: 8 / 10

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

"He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes"

மு.வ உரை: இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

சாலமன் பாப்பையா: உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

குறள் 629 ஓவியம்
குறள் எண்: #629 அதிகாரம் வரிசை: 9 / 10

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

"Mid joys he yields not heart to joys' controlMid sorrows, sorrow cannot touch his soul"

மு.வ உரை: இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

சாலமன் பாப்பையா: தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

குறள் 630 ஓவியம்
குறள் எண்: #630 அதிகாரம் வரிசை: 10 / 10

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

"Who pain as pleasure takes, he shall acquireThe bliss to which his foes in vain aspire"

மு.வ உரை: ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

சாலமன் பாப்பையா: ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்