ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: இல்லறவியல் (Domestic Virtue) அதிகாரம் 19 / 133

புறங்கூறாமை Not Backbiting (Chapter 19)

இவ்வதிகாரத்தில் குறள் 181 முதல் 190 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 181 ஓவியம்
குறள் எண்: #181 அதிகாரம் வரிசை: 1 / 10

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

"Though virtuous words his lips speak not, and all his deeds are illIf neighbour he defame not, there's good within him still"

மு.வ உரை: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா: ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

குறள் 182 ஓவியம்
குறள் எண்: #182 அதிகாரம் வரிசை: 2 / 10

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

"Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smile"

மு.வ உரை: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

சாலமன் பாப்பையா: அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.

குறள் 183 ஓவியம்
குறள் எண்: #183 அதிகாரம் வரிசை: 3 / 10

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

"'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh"

மு.வ உரை: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.

சாலமன் பாப்பையா: காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

குறள் 184 ஓவியம்
குறள் எண்: #184 அதிகாரம் வரிசை: 4 / 10

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

"In presence though unkindly words you speak, say notIn absence words whose ill result exceeds your thought"

மு.வ உரை: எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

சாலமன் பாப்பையா: ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

குறள் 185 ஓவியம்
குறள் எண்: #185 அதிகாரம் வரிசை: 5 / 10

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

"The slanderous meanness that an absent friend defames,'This man in words owns virtue, not in heart,' proclaims"

மு.வ உரை: அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

சாலமன் பாப்பையா: அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

குறள் 186 ஓவியம்
குறள் எண்: #186 அதிகாரம் வரிசை: 6 / 10

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

"Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tell"

மு.வ உரை: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா: அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

குறள் 187 ஓவியம்
குறள் எண்: #187 அதிகாரம் வரிசை: 7 / 10

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

"With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away"

மு.வ உரை: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

சாலமன் பாப்பையா: கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

குறள் 188 ஓவியம்
குறள் எண்: #188 அதிகாரம் வரிசை: 8 / 10

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

"Whose nature bids them faults of closest friends proclaimWhat mercy will they show to other men's good name"

மு.வ உரை: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

சாலமன் பாப்பையா: தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

குறள் 189 ஓவியம்
குறள் எண்: #189 அதிகாரம் வரிசை: 9 / 10

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

"'Tis charity, I ween, that makes the earth sustain their loadWho, neighbours' absence watching, tales or slander tell abroad"

மு.வ உரை: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

சாலமன் பாப்பையா: பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

குறள் 190 ஓவியம்
குறள் எண்: #190 அதிகாரம் வரிசை: 10 / 10

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

"If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man"

மு.வ உரை: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

சாலமன் பாப்பையா: புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்