English Tamil Thanglish
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் காமத்துப்பால் அதிகாரம் 123: பொழுதுகண்டு இரங்கல்
காமத்துப்பால் (Love) இயல்: கற்பியல் (The Post-marital love) அதிகாரம் 123 / 133

பொழுதுகண்டு இரங்கல் Lamentations at Eventide (Chapter 123)

இவ்வதிகாரத்தில் குறள் 1221 முதல் 1230 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 1221 ஓவியம்
குறள் எண்: #1221 அதிகாரம் வரிசை: 1 / 10

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

"Thou art not evening, but a spear that doth devourThe souls of brides; farewell, thou evening hour"

மு.வ உரை: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

சாலமன் பாப்பையா: பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

குறள் 1222 ஓவியம்
குறள் எண்: #1222 அதிகாரம் வரிசை: 2 / 10

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

"Thine eye is sad; Hail, doubtful hour of eventide!Of cruel eye, as is my spouse, is too thy bride"

மு.வ உரை: மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?

சாலமன் பாப்பையா: பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?

குறள் 1223 ஓவியம்
குறள் எண்: #1223 அதிகாரம் வரிசை: 3 / 10

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

"With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows"

மு.வ உரை: பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

சாலமன் பாப்பையா: அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

குறள் 1224 ஓவியம்
குறள் எண்: #1224 அதிகாரம் வரிசை: 4 / 10

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

"When absent is my love, the evening hour descends, As when an alien host to field of battle wends"

மு.வ உரை: காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

சாலமன் பாப்பையா: அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

குறள் 1225 ஓவியம்
குறள் எண்: #1225 அதிகாரம் வரிசை: 5 / 10

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?

"O morn, how have I won thy grace? thou bring'st reliefO eve, why art thou foe! thou dost renew my grief"

மு.வ உரை: யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

சாலமன் பாப்பையா: காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

குறள் 1226 ஓவியம்
குறள் எண்: #1226 அதிகாரம் வரிசை: 6 / 10

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

"The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew"

மு.வ உரை: மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

சாலமன் பாப்பையா: முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

குறள் 1227 ஓவியம்
குறள் எண்: #1227 அதிகாரம் வரிசை: 7 / 10

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

"My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour"

மு.வ உரை: இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

சாலமன் பாப்பையா: காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

குறள் 1228 ஓவியம்
குறள் எண்: #1228 அதிகாரம் வரிசை: 8 / 10

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

"The shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish near"

மு.வ உரை: ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

சாலமன் பாப்பையா: முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

குறள் 1229 ஓவியம்
குறள் எண்: #1229 அதிகாரம் வரிசை: 9 / 10

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

"If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend"

மு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

சாலமன் பாப்பையா: இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

குறள் 1230 ஓவியம்
குறள் எண்: #1230 அதிகாரம் வரிசை: 10 / 10

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

"This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me"

மு.வ உரை: ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

சாலமன் பாப்பையா: அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural