English Tamil Thanglish
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் காமத்துப்பால் அதிகாரம் 117: படர்மெலிந் திரங்கல்
காமத்துப்பால் (Love) இயல்: கற்பியல் (The Post-marital love) அதிகாரம் 117 / 133

படர்மெலிந் திரங்கல் Complainings (Chapter 117)

இவ்வதிகாரத்தில் குறள் 1161 முதல் 1170 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 1161 ஓவியம்
குறள் எண்: #1161 அதிகாரம் வரிசை: 1 / 10

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

"I would my pain conceal, but see! it surging swells, As streams to those that draw from ever-springing wells"

மு.வ உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

சாலமன் பாப்பையா: என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

குறள் 1162 ஓவியம்
குறள் எண்: #1162 அதிகாரம் வரிசை: 2 / 10

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

"I cannot hide this pain of mine, yet shame restrainsWhen I would tell it out to him who caused my pains"

மு.வ உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

சாலமன் பாப்பையா: இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.

குறள் 1163 ஓவியம்
குறள் எண்: #1163 அதிகாரம் வரிசை: 3 / 10

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

"My soul, like porter's pole, within my wearied frame, Sustains a two-fold burthen poised, of love and shame"

மு.வ உரை: துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

சாலமன் பாப்பையா: காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

குறள் 1164 ஓவியம்
குறள் எண்: #1164 அதிகாரம் வரிசை: 4 / 10

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

"A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty bark that wafts to yonder shore"

மு.வ உரை: காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

சாலமன் பாப்பையா: காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.

குறள் 1165 ஓவியம்
குறள் எண்: #1165 அதிகாரம் வரிசை: 5 / 10

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

"Who work us woe in friendship's trustful hour, What will they prove when angry tempests lower"

மு.வ உரை: ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?

சாலமன் பாப்பையா: இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?

குறள் 1166 ஓவியம்
குறள் எண்: #1166 அதிகாரம் வரிசை: 6 / 10

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

"A happy love 's sea of joy; but mightier sorrows rollFrom unpropitious love athwart the troubled soul"

மு.வ உரை: காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

சாலமன் பாப்பையா: காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.

குறள் 1167 ஓவியம்
குறள் எண்: #1167 அதிகாரம் வரிசை: 7 / 10

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

"I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only I"

மு.வ உரை: காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

சாலமன் பாப்பையா: காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

குறள் 1168 ஓவியம்
குறள் எண்: #1168 அதிகாரம் வரிசை: 8 / 10

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

"All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps"

மு.வ உரை: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா: பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!

குறள் 1169 ஓவியம்
குறள் எண்: #1169 அதிகாரம் வரிசை: 9 / 10

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

"More cruel than the cruelty of him, the cruel one, In these sad times are lengthening hours of night I watch alone"

மு.வ உரை: ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

சாலமன் பாப்பையா: இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.

குறள் 1170 ஓவியம்
குறள் எண்: #1170 அதிகாரம் வரிசை: 10 / 10

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

"When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swim"

மு.வ உரை: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா: என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural