English Tamil Thanglish
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: பாயிரவியல் (Prologue) அதிகாரம் 1 / 133

கடவுள் வாழ்த்து The Praise of God (Chapter 1)

இவ்வதிகாரத்தில் குறள் 1 முதல் 10 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 1 ஓவியம்
குறள் எண்: #1 அதிகாரம் வரிசை: 1 / 10

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

"A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains"

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

குறள் 2 ஓவியம்
குறள் எண்: #2 அதிகாரம் வரிசை: 2 / 10

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

"No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's' feet adore"

மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

குறள் 3 ஓவியம்
குறள் எண்: #3 அதிகாரம் வரிசை: 3 / 10

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

"His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gainIn bliss long time shall dwell above this earthly plain"

மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

சாலமன் பாப்பையா: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

குறள் 4 ஓவியம்
குறள் எண்: #4 அதிகாரம் வரிசை: 4 / 10

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

"His foot, 'Whom want affects not, irks not grief,' who gainShall not, through every time, of any woes complain"

மு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

சாலமன் பாப்பையா: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

குறள் 5 ஓவியம்
குறள் எண்: #5 அதிகாரம் வரிசை: 5 / 10

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

"The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well"

மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

சாலமன் பாப்பையா: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

குறள் 6 ஓவியம்
குறள் எண்: #6 அதிகாரம் வரிசை: 6 / 10

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

"Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'"

மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

சாலமன் பாப்பையா: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்

குறள் 7 ஓவியம்
குறள் எண்: #7 அதிகாரம் வரிசை: 7 / 10

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

"Unless His foot, 'to Whom none can compare,' men gain,'Tis hard for mind to find relief from anxious pain"

மு.வ உரை: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

சாலமன் பாப்பையா: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

குறள் 8 ஓவியம்
குறள் எண்: #8 அதிகாரம் வரிசை: 8 / 10

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

"Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attain"

மு.வ உரை: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

சாலமன் பாப்பையா: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

குறள் 9 ஓவியம்
குறள் எண்: #9 அதிகாரம் வரிசை: 9 / 10

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

"Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead"

மு.வ உரை: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

சாலமன் பாப்பையா: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே

குறள் 10 ஓவியம்
குறள் எண்: #10 அதிகாரம் வரிசை: 10 / 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

"They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach the shore of being's mighty main"

மு.வ உரை: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

சாலமன் பாப்பையா: கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural

Share