ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
பொருட்பால் (Wealth) இயல்: நட்பியல் (Friendship) அதிகாரம் 95 / 133

மருந்து Medicine (Chapter 95)

இவ்வதிகாரத்தில் குறள் 941 முதல் 950 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 941 ஓவியம்
குறள் எண்: #941 அதிகாரம் வரிசை: 1 / 10

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

"The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause disease"

மு.வ உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

சாலமன் பாப்பையா: மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

குறள் 942 ஓவியம்
குறள் எண்: #942 அதிகாரம் வரிசை: 2 / 10

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

"No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again"

மு.வ உரை: முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

குறள் 943 ஓவியம்
குறள் எண்: #943 அதிகாரம் வரிசை: 3 / 10

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

"Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again"

மு.வ உரை: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

சாலமன் பாப்பையா: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

குறள் 944 ஓவியம்
குறள் எண்: #944 அதிகாரம் வரிசை: 4 / 10

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

"Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree"

மு.வ உரை: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

சாலமன் பாப்பையா: முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

குறள் 945 ஓவியம்
குறள் எண்: #945 அதிகாரம் வரிசை: 5 / 10

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

"With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel"

மு.வ உரை: மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

சாலமன் பாப்பையா: ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

குறள் 946 ஓவியம்
குறள் எண்: #946 அதிகாரம் வரிசை: 6 / 10

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

"On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure"

மு.வ உரை: குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

சாலமன் பாப்பையா: குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

குறள் 947 ஓவியம்
குறள் எண்: #947 அதிகாரம் வரிசை: 7 / 10

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

"Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains"

மு.வ உரை: பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

சாலமன் பாப்பையா: தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

குறள் 948 ஓவியம்
குறள் எண்: #948 அதிகாரம் வரிசை: 8 / 10

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

"Disease, its cause, what may abate the ill:Let leech examine these, then use his skill"

மு.வ உரை: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

குறள் 949 ஓவியம்
குறள் எண்: #949 அதிகாரம் வரிசை: 9 / 10

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

"The habitudes of patient and disease, the crises of the illThese must the learned leech think over well, then use his skill"

மு.வ உரை: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா: மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

குறள் 950 ஓவியம்
குறள் எண்: #950 அதிகாரம் வரிசை: 10 / 10

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.

"For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide"

மு.வ உரை: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா: நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்