ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் பொருட்பால் அதிகாரம் 90: பெரியாரைப் பிழையாமை
பொருட்பால் (Wealth) இயல்: நட்பியல் (Friendship) அதிகாரம் 90 / 133

பெரியாரைப் பிழையாமை Not Offending the Great (Chapter 90)

இவ்வதிகாரத்தில் குறள் 891 முதல் 900 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 891 ஓவியம்
குறள் எண்: #891 அதிகாரம் வரிசை: 1 / 10

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

"The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will"

மு.வ உரை: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

சாலமன் பாப்பையா: எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

குறள் 892 ஓவியம்
குறள் எண்: #892 அதிகாரம் வரிசை: 2 / 10

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

"If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill"

மு.வ உரை: ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

சாலமன் பாப்பையா: பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

குறள் 893 ஓவியம்
குறள் எண்: #893 அதிகாரம் வரிசை: 3 / 10

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

"Who ruin covet let them shut their ears, and do despiteTo those who, where they list to ruin have the might"

மு.வ உரை: அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

சாலமன் பாப்பையா: ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

குறள் 894 ஓவியம்
குறள் எண்: #894 அதிகாரம் வரிசை: 4 / 10

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

"When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey"

மு.வ உரை: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா: அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

குறள் 895 ஓவியம்
குறள் எண்: #895 அதிகாரம் வரிசை: 5 / 10

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

"Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead"

மு.வ உரை: மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா: பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

குறள் 896 ஓவியம்
குறள் எண்: #896 அதிகாரம் வரிசை: 6 / 10

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

"Though in the conflagration caught, he may escape from thence:He 'scapes not who in life to great ones gives offence"

மு.வ உரை: தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா: தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

குறள் 897 ஓவியம்
குறள் எண்: #897 அதிகாரம் வரிசை: 7 / 10

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

"Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown"

மு.வ உரை: தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

சாலமன் பாப்பையா: குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?

குறள் 898 ஓவியம்
குறள் எண்: #898 அதிகாரம் வரிசை: 8 / 10

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

"If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed"

மு.வ உரை: மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

சாலமன் பாப்பையா: மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

குறள் 899 ஓவியம்
குறள் எண்: #899 அதிகாரம் வரிசை: 9 / 10

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

"When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame"

மு.வ உரை: உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா: உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

குறள் 900 ஓவியம்
குறள் எண்: #900 அதிகாரம் வரிசை: 10 / 10

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

"Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost"

மு.வ உரை: மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா: மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்