ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: இல்லறவியல் (Domestic Virtue) அதிகாரம் 8 / 133

அன்புடைமை The Possession of Love (Chapter 8)

இவ்வதிகாரத்தில் குறள் 71 முதல் 80 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 71 ஓவியம்
குறள் எண்: #71 அதிகாரம் வரிசை: 1 / 10

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

"And is there bar that can even love restrain?The tiny tear shall make the lover's secret plain"

மு.வ உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

சாலமன் பாப்பையா: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

குறள் 72 ஓவியம்
குறள் எண்: #72 அதிகாரம் வரிசை: 2 / 10

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

"The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone"

மு.வ உரை: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

சாலமன் பாப்பையா: அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

குறள் 73 ஓவியம்
குறள் எண்: #73 அதிகாரம் வரிசை: 3 / 10

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

"Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone"

மு.வ உரை: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா: பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்

குறள் 74 ஓவியம்
குறள் எண்: #74 அதிகாரம் வரிசை: 4 / 10

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

"From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship binds"

மு.வ உரை: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

சாலமன் பாப்பையா: குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்

குறள் 75 ஓவியம்
குறள் எண்: #75 அதிகாரம் வரிசை: 5 / 10

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

"Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of love"

மு.வ உரை: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்

சாலமன் பாப்பையா: இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்

குறள் 76 ஓவியம்
குறள் எண்: #76 அதிகாரம் வரிசை: 6 / 10

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

"The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain"

மு.வ உரை: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது

சாலமன் பாப்பையா: அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

குறள் 77 ஓவியம்
குறள் எண்: #77 அதிகாரம் வரிசை: 7 / 10

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

"As sun's fierce ray dries up the boneless things, So loveless beings virtue's power to nothing brings"

மு.வ உரை: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

சாலமன் பாப்பையா: எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

குறள் 78 ஓவியம்
குறள் எண்: #78 அதிகாரம் வரிசை: 8 / 10

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

"The loveless soul, the very joys of life may know, When flowers, in barren soil, on sapless trees, shall blow"

மு.வ உரை: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா: மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

குறள் 79 ஓவியம்
குறள் எண்: #79 அதிகாரம் வரிசை: 9 / 10

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

"Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed"

மு.வ உரை: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா: குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?

குறள் 80 ஓவியம்
குறள் எண்: #80 அதிகாரம் வரிசை: 10 / 10

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

"Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within"

மு.வ உரை: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்

சாலமன் பாப்பையா: அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்