English Tamil Thanglish
Login Register
பொருட்பால் (Wealth) இயல்: அமைச்சியல் (Minister of State) அதிகாரம் 69 / 133

தூது The Envoy (Chapter 69)

இவ்வதிகாரத்தில் குறள் 681 முதல் 690 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 681 ஓவியம்
குறள் எண்: #681 அதிகாரம் வரிசை: 1 / 10

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

"Benevolence high birth, the courtesy kings love:-These qualities the envoy of a king approve"

மு.வ உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

சாலமன் பாப்பையா: நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

குறள் 682 ஓவியம்
குறள் எண்: #682 அதிகாரம் வரிசை: 2 / 10

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

"Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings"

மு.வ உரை: அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

சாலமன் பாப்பையா: அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

குறள் 683 ஓவியம்
குறள் எண்: #683 அதிகாரம் வரிசை: 3 / 10

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

"Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory"

மு.வ உரை: அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

சாலமன் பாப்பையா: அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

குறள் 684 ஓவியம்
குறள் எண்: #684 அதிகாரம் வரிசை: 4 / 10

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

"Sense, goodly grace, and knowledge exquisiteWho hath these three for envoy's task is fit"

மு.வ உரை: இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

சாலமன் பாப்பையா: இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

குறள் 685 ஓவியம்
குறள் எண்: #685 அதிகாரம் வரிசை: 5 / 10

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

"In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lord"

மு.வ உரை: பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

சாலமன் பாப்பையா: அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

குறள் 686 ஓவியம்
குறள் எண்: #686 அதிகாரம் வரிசை: 6 / 10

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

"An envoy meet is he, well-learned, of fearless eyeWho speaks right home, prepared for each emergency"

மு.வ உரை: கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா: அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

குறள் 687 ஓவியம்
குறள் எண்: #687 அதிகாரம் வரிசை: 7 / 10

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

"He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell"

மு.வ உரை: தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா: தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

குறள் 688 ஓவியம்
குறள் எண்: #688 அதிகாரம் வரிசை: 8 / 10

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

"Integrity, resources, soul determined, truthfulnessWho rightly speaks his message must these marks possess"

மு.வ உரை: தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

சாலமன் பாப்பையா: பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

குறள் 689 ஓவியம்
குறள் எண்: #689 அதிகாரம் வரிசை: 9 / 10

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

"His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king"

மு.வ உரை: குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

சாலமன் பாப்பையா: தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

குறள் 690 ஓவியம்
குறள் எண்: #690 அதிகாரம் வரிசை: 10 / 10

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

"Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king"

மு.வ உரை: தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா: தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural

Share