English Tamil Thanglish
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் பொருட்பால் அதிகாரம் 57: வெருவந்த செய்யாமை
பொருட்பால் (Wealth) இயல்: அரசியல் (Royalty) அதிகாரம் 57 / 133

வெருவந்த செய்யாமை Absence of Terrorism (Chapter 57)

இவ்வதிகாரத்தில் குறள் 561 முதல் 570 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 561 ஓவியம்
குறள் எண்: #561 அதிகாரம் வரிசை: 1 / 10

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

"Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he"

மு.வ உரை: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா: தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

குறள் 562 ஓவியம்
குறள் எண்: #562 அதிகாரம் வரிசை: 2 / 10

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

"For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall"

மு.வ உரை: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா: நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

குறள் 563 ஓவியம்
குறள் எண்: #563 அதிகாரம் வரிசை: 3 / 10

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

"Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure"

மு.வ உரை: குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

குறள் 564 ஓவியம்
குறள் எண்: #564 அதிகாரம் வரிசை: 4 / 10

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

"'Ah! cruel is our king', where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay"

மு.வ உரை: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா: நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

குறள் 565 ஓவியம்
குறள் எண்: #565 அதிகாரம் வரிசை: 5 / 10

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

"Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance"

மு.வ உரை: எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

சாலமன் பாப்பையா: தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

குறள் 566 ஓவியம்
குறள் எண்: #566 அதிகாரம் வரிசை: 6 / 10

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

"The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall die"

மு.வ உரை: கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

சாலமன் பாப்பையா: சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

குறள் 567 ஓவியம்
குறள் எண்: #567 அதிகாரம் வரிசை: 7 / 10

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

"Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering might"

மு.வ உரை: கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

சாலமன் பாப்பையா: கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

குறள் 568 ஓவியம்
குறள் எண்: #568 அதிகாரம் வரிசை: 8 / 10

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.

"Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er"

மு.வ உரை: அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

சாலமன் பாப்பையா: தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

குறள் 569 ஓவியம்
குறள் எண்: #569 அதிகாரம் வரிசை: 9 / 10

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

"Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die"

மு.வ உரை: முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

சாலமன் பாப்பையா: நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

குறள் 570 ஓவியம்
குறள் எண்: #570 அதிகாரம் வரிசை: 10 / 10

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

"Tyrants with fools their counsels share:Earth can no heavier burthen bear"

மு.வ உரை: கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா: மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural

Share