ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் பொருட்பால் அதிகாரம் 52: தெரிந்து வினையாடல்
பொருட்பால் (Wealth) இயல்: அரசியல் (Royalty) அதிகாரம் 52 / 133

தெரிந்து வினையாடல் Selection and Employment (Chapter 52)

இவ்வதிகாரத்தில் குறள் 511 முதல் 520 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 511 ஓவியம்
குறள் எண்: #511 அதிகாரம் வரிசை: 1 / 10

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

"Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employ"

மு.வ உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

சாலமன் பாப்பையா: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

குறள் 512 ஓவியம்
குறள் எண்: #512 அதிகாரம் வரிசை: 2 / 10

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

"Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand"

மு.வ உரை: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா: பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

குறள் 513 ஓவியம்
குறள் எண்: #513 அதிகாரம் வரிசை: 3 / 10

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

"A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be"

மு.வ உரை: அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

சாலமன் பாப்பையா: நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

குறள் 514 ஓவியம்
குறள் எண்: #514 அதிகாரம் வரிசை: 4 / 10

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

"Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, by action tried"

மு.வ உரை: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா: எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

குறள் 515 ஓவியம்
குறள் எண்: #515 அதிகாரம் வரிசை: 5 / 10

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

"No specious fav'rite should the king's commission bear, But he that knows, and work performs with patient care"

மு.வ உரை: (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

சாலமன் பாப்பையா: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

குறள் 516 ஓவியம்
குறள் எண்: #516 அதிகாரம் வரிசை: 6 / 10

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

"Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'Of hour befitting both assured, let every work proceed"

மு.வ உரை: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

குறள் 517 ஓவியம்
குறள் எண்: #517 அதிகாரம் வரிசை: 7 / 10

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

"'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand"

மு.வ உரை: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா: இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

குறள் 518 ஓவியம்
குறள் எண்: #518 அதிகாரம் வரிசை: 8 / 10

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

"As each man's special aptitude is known, Bid each man make that special work his own"

மு.வ உரை: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா: ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

குறள் 519 ஓவியம்
குறள் எண்: #519 அதிகாரம் வரிசை: 9 / 10

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

"Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share"

மு.வ உரை: மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

சாலமன் பாப்பையா: தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

குறள் 520 ஓவியம்
குறள் எண்: #520 அதிகாரம் வரிசை: 10 / 10

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

"Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way"

மு.வ உரை: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்