ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
பொருட்பால் (Wealth) இயல்: அரசியல் (Royalty) அதிகாரம் 40 / 133

கல்வி Learning (Chapter 40)

இவ்வதிகாரத்தில் குறள் 391 முதல் 400 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 391 ஓவியம்
குறள் எண்: #391 அதிகாரம் வரிசை: 1 / 10

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

"So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain"

மு.வ உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

குறள் 392 ஓவியம்
குறள் எண்: #392 அதிகாரம் வரிசை: 2 / 10

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

"The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live"

மு.வ உரை: எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா: வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

குறள் 393 ஓவியம்
குறள் எண்: #393 அதிகாரம் வரிசை: 3 / 10

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

"Men who learning gain have eyes, men say; Blockheads' faces pairs of sores display"

மு.வ உரை: கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சாலமன் பாப்பையா: கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

குறள் 394 ஓவியம்
குறள் எண்: #394 அதிகாரம் வரிசை: 4 / 10

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

"You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art"

மு.வ உரை: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா: மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

குறள் 395 ஓவியம்
குறள் எண்: #395 அதிகாரம் வரிசை: 5 / 10

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

"With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place"

மு.வ உரை: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா: செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

குறள் 396 ஓவியம்
குறள் எண்: #396 அதிகாரம் வரிசை: 6 / 10

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

"In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flow"

மு.வ உரை: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

சாலமன் பாப்பையா: மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

குறள் 397 ஓவியம்
குறள் எண்: #397 அதிகாரம் வரிசை: 7 / 10

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

"The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roam"

மு.வ உரை: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

சாலமன் பாப்பையா: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?

குறள் 398 ஓவியம்
குறள் எண்: #398 அதிகாரம் வரிசை: 8 / 10

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

"The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains"

மு.வ உரை: ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

சாலமன் பாப்பையா: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

குறள் 399 ஓவியம்
குறள் எண்: #399 அதிகாரம் வரிசை: 9 / 10

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

"Their joy is joy of all the world, they see; thus moreThe learners learn to love their cherished lore"

மு.வ உரை: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

சாலமன் பாப்பையா: தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

குறள் 400 ஓவியம்
குறள் எண்: #400 அதிகாரம் வரிசை: 10 / 10

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

"Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy"

மு.வ உரை: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

சாலமன் பாப்பையா: கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்