English Tamil Thanglish
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: துறவறவியல் (Ascetic Virtue) அதிகாரம் 31 / 133

வெகுளாமை Restraining Anger (Chapter 31)

இவ்வதிகாரத்தில் குறள் 301 முதல் 310 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 301 ஓவியம்
குறள் எண்: #301 அதிகாரம் வரிசை: 1 / 10

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

"Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein"

மு.வ உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

சாலமன் பாப்பையா: எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?

குறள் 302 ஓவியம்
குறள் எண்: #302 அதிகாரம் வரிசை: 2 / 10

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

"Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still"

மு.வ உரை: பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா: பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

குறள் 303 ஓவியம்
குறள் எண்: #303 அதிகாரம் வரிசை: 3 / 10

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

"If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget"

மு.வ உரை: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

சாலமன் பாப்பையா: தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

குறள் 304 ஓவியம்
குறள் எண்: #304 அதிகாரம் வரிசை: 4 / 10

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

"Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy"

மு.வ உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

சாலமன் பாப்பையா: முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

குறள் 305 ஓவியம்
குறள் எண்: #305 அதிகாரம் வரிசை: 5 / 10

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

"If thou would'st guard thyself, guard against wrath alway;'Gainst wrath who guards not, him his wrath shall slay"

மு.வ உரை: ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

சாலமன் பாப்பையா: தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

குறள் 306 ஓவியம்
குறள் எண்: #306 அதிகாரம் வரிசை: 6 / 10

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

"Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear"

மு.வ உரை: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

சாலமன் பாப்பையா: சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

குறள் 307 ஓவியம்
குறள் எண்: #307 அதிகாரம் வரிசை: 7 / 10

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

"The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing"

மு.வ உரை: (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா: நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

குறள் 308 ஓவியம்
குறள் எண்: #308 அதிகாரம் வரிசை: 8 / 10

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

"Though men should work thee woe, like touch of tongues of fire'Tis well if thou canst save thy soul from burning ire"

மு.வ உரை: பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா: பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

குறள் 309 ஓவியம்
குறள் எண்: #309 அதிகாரம் வரிசை: 9 / 10

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

"If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires"

மு.வ உரை: ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

சாலமன் பாப்பையா: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

குறள் 310 ஓவியம்
குறள் எண்: #310 அதிகாரம் வரிசை: 10 / 10

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

"Men of surpassing wrath are like the men who've passed away; Who wrath renounce, equals of all-renouncing sages they"

மு.வ உரை: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா: பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural