ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: துறவறவியல் (Ascetic Virtue) அதிகாரம் 26 / 133

புலால் மறுத்தல் Abstinence from Flesh (Chapter 26)

இவ்வதிகாரத்தில் குறள் 251 முதல் 260 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 251 ஓவியம்
குறள் எண்: #251 அதிகாரம் வரிசை: 1 / 10

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

"How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own"

மு.வ உரை: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

சாலமன் பாப்பையா: தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?

குறள் 252 ஓவியம்
குறள் எண்: #252 அதிகாரம் வரிசை: 2 / 10

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

"No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate"

மு.வ உரை: பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா: பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.

குறள் 253 ஓவியம்
குறள் எண்: #253 அதிகாரம் வரிசை: 3 / 10

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

"Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can find"

மு.வ உரை: ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

சாலமன் பாப்பையா: கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

குறள் 254 ஓவியம்
குறள் எண்: #254 அதிகாரம் வரிசை: 4 / 10

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.

"'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; To eat dead flesh can never worthy end fulfil"

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

சாலமன் பாப்பையா: இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே

குறள் 255 ஓவியம்
குறள் எண்: #255 அதிகாரம் வரிசை: 5 / 10

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

"If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again"

மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

சாலமன் பாப்பையா: இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.

குறள் 256 ஓவியம்
குறள் எண்: #256 அதிகாரம் வரிசை: 6 / 10

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

"'We eat the slain,' you say, by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy"

மு.வ உரை: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

சாலமன் பாப்பையா: தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

குறள் 257 ஓவியம்
குறள் எண்: #257 அதிகாரம் வரிசை: 7 / 10

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

"With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease"

மு.வ உரை: புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

சாலமன் பாப்பையா: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

குறள் 258 ஓவியம்
குறள் எண்: #258 அதிகாரம் வரிசை: 8 / 10

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

"Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave"

மு.வ உரை: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

சாலமன் பாப்பையா: பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

குறள் 259 ஓவியம்
குறள் எண்: #259 அதிகாரம் வரிசை: 9 / 10

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

"Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share"

மு.வ உரை: நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா: (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

குறள் 260 ஓவியம்
குறள் எண்: #260 அதிகாரம் வரிசை: 10 / 10

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

"Who slays nought,- flesh rejects- his feet beforeAll living things with clasped hands adore"

மு.வ உரை: ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

சாலமன் பாப்பையா: எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருக்குறள்
இருண்ட பயன்முறை

பகிர்