English Tamil Thanglish
Login Register
அறத்துப்பால் (Virtue) இயல்: இல்லறவியல் (Domestic Virtue) அதிகாரம் 14 / 133

ஒழுக்கம் உடைமை The Possession of Decorum (Chapter 14)

இவ்வதிகாரத்தில் குறள் 131 முதல் 140 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 131 ஓவியம்
குறள் எண்: #131 அதிகாரம் வரிசை: 1 / 10

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

"'Decorum' gives especial excellence; with greater care'Decorum' should men guard than life, which all men share"

மு.வ உரை: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா: ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

குறள் 132 ஓவியம்
குறள் எண்: #132 அதிகாரம் வரிசை: 2 / 10

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

"Searching, duly watching, learning, 'decorum' still we find; Man's only aid; toiling, guard thou this with watchful mind"

மு.வ உரை: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா: எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

குறள் 133 ஓவியம்
குறள் எண்: #133 அதிகாரம் வரிசை: 3 / 10

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

"'Decorum's' true nobility on earth;'Indecorum's' issue is ignoble birth"

மு.வ உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

சாலமன் பாப்பையா: தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

குறள் 134 ஓவியம்
குறள் எண்: #134 அதிகாரம் வரிசை: 4 / 10

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

"Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in 'decorum due,' birthright's gone for evermore"

மு.வ உரை: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

குறள் 135 ஓவியம்
குறள் எண்: #135 அதிகாரம் வரிசை: 5 / 10

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

"The envious soul in life no rich increase of blessing gains, So man of 'due decorum' void no dignity obtains"

மு.வ உரை: பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா: பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

குறள் 136 ஓவியம்
குறள் எண்: #136 அதிகாரம் வரிசை: 6 / 10

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

"The strong of soul no jot abate of 'strict decorum's' laws, Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause"

மு.வ உரை: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா: ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

குறள் 137 ஓவியம்
குறள் எண்: #137 அதிகாரம் வரிசை: 7 / 10

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

"'Tis source of dignity when 'true decorum' is preserved; Who break 'decorum's' rules endure e'en censures undeserved"

மு.வ உரை: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா: ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

குறள் 138 ஓவியம்
குறள் எண்: #138 அதிகாரம் வரிசை: 8 / 10

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

"'Decorum true' observed a seed of good will be;'Decorum's breach' will sorrow yield eternally"

மு.வ உரை: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா: நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

குறள் 139 ஓவியம்
குறள் எண்: #139 அதிகாரம் வரிசை: 9 / 10

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

"It cannot be that they who 'strict decorum's' law fulfil, E'en in forgetful mood, should utter words of ill"

மு.வ உரை: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா: மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

குறள் 140 ஓவியம்
குறள் எண்: #140 அதிகாரம் வரிசை: 10 / 10

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

"Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well"

மு.வ உரை: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா: முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural