English Tamil Thanglish
Login Register
பொருட்பால் (Wealth) இயல்: குடியியல் (Miscellaneous) அதிகாரம் 105 / 133

நல்குரவு Poverty (Chapter 105)

இவ்வதிகாரத்தில் குறள் 1041 முதல் 1050 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 1041 ஓவியம்
குறள் எண்: #1041 அதிகாரம் வரிசை: 1 / 10

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

"You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone"

மு.வ உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

சாலமன் பாப்பையா: இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

குறள் 1042 ஓவியம்
குறள் எண்: #1042 அதிகாரம் வரிசை: 2 / 10

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

"Malefactor matchless! poverty destroysThis world's and the next world's joys"

மு.வ உரை: வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

சாலமன் பாப்பையா: இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

குறள் 1043 ஓவியம்
குறள் எண்: #1043 அதிகாரம் வரிசை: 3 / 10

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

"Importunate desire, which poverty men name, Destroys both old descent and goodly fame"

மு.வ உரை: வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா: இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

குறள் 1044 ஓவியம்
குறள் எண்: #1044 அதிகாரம் வரிசை: 4 / 10

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

"From penury will spring, 'mid even those of noble race, Oblivion that gives birth to words that bring disgrace"

மு.வ உரை: வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

சாலமன் பாப்பையா: நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

குறள் 1045 ஓவியம்
குறள் எண்: #1045 அதிகாரம் வரிசை: 5 / 10

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

"From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow"

மு.வ உரை: வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

சாலமன் பாப்பையா: இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

குறள் 1046 ஓவியம்
குறள் எண்: #1046 அதிகாரம் வரிசை: 6 / 10

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

"Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away"

மு.வ உரை: நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

சாலமன் பாப்பையா: நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

குறள் 1047 ஓவியம்
குறள் எண்: #1047 அதிகாரம் வரிசை: 7 / 10

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

"From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her face"

மு.வ உரை: அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

சாலமன் பாப்பையா: நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

குறள் 1048 ஓவியம்
குறள் எண்: #1048 அதிகாரம் வரிசை: 8 / 10

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

"And will it come today as yesterday, The grief of want that eats my soul away"

மு.வ உரை: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா: நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

குறள் 1049 ஓவியம்
குறள் எண்: #1049 அதிகாரம் வரிசை: 9 / 10

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

"Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose"

மு.வ உரை: ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

சாலமன் பாப்பையா: யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

குறள் 1050 ஓவியம்
குறள் எண்: #1050 அதிகாரம் வரிசை: 10 / 10

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

"Unless the destitute will utterly themselves deny, They cause their neighbour's salt and vinegar to die"

மு.வ உரை: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா: உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural